வைபவங்களில் புகைப்படம் எடுக்கையில் இனி இது கட்டாயம்!
திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் புகைப்படம் எடுக்கும் போது முகக் கவசத்தைக் கழற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வைபவங்களில் புகைப்படம் எடுப்பதற்காக முகக் கவசங்களைக் கழற்றுவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இது அவ்வளவு நல்ல செயல் அல்ல என்றும் கூறினார்.
அதோடு தண்ணீர் அல்லது உணவு அருந்துவது தவிர்ந்த எக்காரணத்துக்காகவும் முகக் கவசங்களை அகற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
திருமணங்கள் மற்றும் பிற விருந்துகள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், நோய் பரவாமல் தடுக்க நாம் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அனைத்து புகைப்படக்காரர்களும் புகைப்படம் எடுப்பதற்காக முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறிய அவர், எக்காரணம் கொண்டும் சில நிமிடங்களுக்கேனும் முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நாளாந்தம் அறிக்கையிடப்படுவோர முற்றாக முடிவடையவில்லையென்றாலும், பாடசாலைகளை நடத்துவது அவசியமான செயலாக இருந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.