இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின், பின் இருக்கைகளிலும் பயணிப்பவர்களும் இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
புதிய திட்டம்
முன்னதாக ஓட்டுநரும், முன் இருக்கையில் பயணிப்போரும் ஆசனப் பட்டி அணிதல் அவசியம் என்பது நடைமுறையில் உள்ளது.
இந்தநிலையில், வீதி விபத்துக்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் இந்த செயல்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இந்த விதிமுறையைப் பின்பற்றாத ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சு எச்சரித்துள்ளது.