சிறுவனை காப்பாற்றச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்
கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற சென்று காணாமல்போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்களன்று பிங்கிரிய பகுதியிலிருந்து மாரவில பிரதேசத்துக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்திருந்த சிலர், மாரவில முதுகட்டுவ பிரதேசத்திலுள்ள கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி திடீரென காணாமல் போனதையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் கூக்குரலிட்டுள்ளனர்.
அங்கு நின்றவர்கள் கடலுக்குள் சென்று குறித்த சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் சில மணி நேரத்தின் பின்னர் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
எனினும் சிறுவனை மீட்க சென்றவர்களில் கொபேஹின்ன பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து அவரை கடந்த இரு நாட்களாக தேடி வந்த நிலையில், இன்று அவர் சடலமாக கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.