சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை
இலங்கை சிறுமி ஒருவரை போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நப்ருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
9 ஆண்டுகளின் பின் தண்டனை
அத்துடன், சந்தேகநபருக்கு 25,000 ரூபாய் அபராதத்தையும் மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க விதித்துள்ளார்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, அவற்றை செலுத்தாவிடின் மேலும் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தமது தீர்ப்பில் அறிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பிய இந்த சிறுமி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்தக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் , இந்தத் தீர்ப்பை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.