தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு ஓடியவர் பிடிபட்டார்!
குளியாப்பிட்டிய, மீகஹகொட்டுவ சந்தியில் உந்துருளி ஓட்டுநர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மற்றுமொரு உந்துருளி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி (CCTV) காணொளி காட்சிகளின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் கைது
குளியாப்பிட்டிய - பண்ணல வீதியூடாக வந்த நபர், குளியாப்பிட்டியவிலிருந்து மாதம்பை பிரதான வீதியூடாகச் சென்ற மற்றுமொரு உந்துருளி ஓட்டுநரை வழிமறித்துத் தாக்கியுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தரப்பிலிருந்து முன்னதாக எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.