மட்டக்களப்பில் ஆலய வழிபாட்டிற்கு சென்றவர் யானை தாக்கி பலி
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் பகுதியில் நேற்று (07) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தும்பங்கேனி சுரவனையடி ஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலய வழிபாட்டுக்கு சென்றவர்
விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று மாலை ஆலய வழிபாட்டுக்கு சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு சென்றவர்கள் இன்று காலை சைக்கிள் மற்றும் சடலத்தினை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பலகாலமாக வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானை மனித மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.