யாழில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்; அவதானம் மக்களே!
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம்
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட நபர், தாங்கள் ஒரு நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகவும், ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மெகா அதிர்ஷ்டத்திற்கான காலக்கேடு முடிவடையவிருப்பதால் தான் தற்போது உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துள்ளதாகத் தெரிவித்து, உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே, இளம் குடும்பஸ்தரும் தனது வங்கி இலக்கத்தைத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறுஞ்செய்தி வரும் என்றும், அதில் வரும் எண்னை தமக்கு தெரிவிக்குமாறும் அழைப்பெடுத்தவ்ர் கூறியுள்ளார். இதனையடுத்துக் குடும்பஸ்தரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத்தொகை குறைவடைந்து சென்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனை சுதாகரித்துக் கொண்ட குடும்பஸ்தர், உடனடியாக தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்று நடந்தவற்றைத் தெரிவித்து, தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார்.
அதன்பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் .சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, அண்மைக் காலமாக இலங்கையில் இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொலிஸார் எச்சரித்திந்ததுடன், அறிமுகம் இல்லாதவர்களிடன் வங்கி தொடர்பிலான தகவல்களை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது