தலையை துண்டித்துச் சிலையில் வைத்த கொடூர சம்பவம்; அடையாளம் காட்டிய மனைவி, மகள்
அம்பலாந்தோட்டை, மாமடல, மொகுடுயாய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவரைச் சுட்டு, வெட்டிக் கொலை செய்ததுடன், அவரது தலையைத் துண்டித்துச் சிலையொன்றில் தொங்கவிட்ட கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொலைசெய்யப்பட்ட நபரின் மனைவியும் மகளும்
இந் நிலையில் சந்தேகநபர்கள் மூவரையும், கொலைசெய்யப்பட்ட நபரின் மனைவியும் மகளும் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளனர்.
விளக்கமறியலில் இந்த மூன்று சந்தேகநபர்களும் ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஒய். ஆர். பி. நெலும்தெனிய முன்னிலையில் வியாழக்கிழமை (04) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோதே, சாட்சியாளர்களான மனைவியும் மகளும் அடையாளம் காட்டியுள்ளனர்.
அடையாள அணிவகுப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொலையை செய்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நான்காவது சந்தேகநபர் உட்பட கைதான நான்கு பேரையும் வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஒய். ஆர். பி. நெலும்தெனிய உத்தரவிட்டுள்ளார்.