அம்பறையில் குளத்தில் குளிக்க சென்ற நபர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 63 வயதுடைய முதியவர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் (29) இடம்பெற்றுள்ளது.
சுமார் காலை 11:40 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நீண்ட நேரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் பின்னர், முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தை சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக மீட்டுள்ளனர்.
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர் மேற்கொண்டுள்ளார்.