பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய நபரால் பரபரப்பு
மீரிகமவில் இனந்தெரியாத நபரால் ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
தனியார் வகுப்புக்கு செல்வதற்காக ரயில் கடவையில் பயணித்த போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அந் நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை அபகரித்துக்கொண்டு தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீரிகம பேருந்து நிலையத்துக்கு வந்த இந்த மாணவன் மற்றுமொரு மாணவனுடன் ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள மாணவன்
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால் நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் முன்பாக பயணித்த இருவர் சத்தம்போட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அபகரிக்கப்பட்ட பை அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.