மது விருந்தில் முரண்பாடு; மைத்துனரால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
சூரியவெவ, அந்தரவேவ, உஸ்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இரவு நடைபெற்ற மது விருந்தின்போது ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நேற்று இரவு அவரது சகோதரியின் வீட்டுக்குச் சென்றபோது அவரது மைத்துனருடன் மது அருந்தியுள்ளார். இதன்போது பழைய பகை ஒன்றின் காரணமாக இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

பழைய பகை காரணமாக முரண்பாடுகள்
கணவருக்கும் சகோதரருக்கும் இடையிலான வாக்குவாதத்தைத் தீர்க்க சந்தேக நபரின் மனைவி முயன்றபோது, மனைவியை தாக்கிய நிலையில் அவர் சுயநினைவிழந்து தரையில் விழுந்துள்ளார். தொடர்ந்து அவர் தனது மைத்துனரையும் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலில் படு காயமடைந்தவர் சூரியவெவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைப் பிடிப்பதற்கான சிறப்பு நடவடிக்கையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.