முன்னாள் காதலி குறித்து தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்
இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவர், தனது முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகளை எழுப்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right to Information Act, 2005 ) கீழ் 97 விண்ணப்பங்களை அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ், கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பெண் தற்கொலைக்கு முயற்சி
அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், அவரிடமிருந்து விலகிச் சென்றுள்ளார்.

இருப்பினும், சந்தோஷ் செல்போன் மற்றும் கடிதங்கள் மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால், அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது முன்னாள் காதலி தற்போது யாரைக் காதலிக்கிறார், இதற்கு முன்பு எத்தனை பேரைக் காதலித்துள்ளார், அவருக்குத் திருமணமாகிவிட்டதா, அவர் உயிருடன் இருக்கிறாரா என்பன உள்ளிட்ட 1,886 கேள்விகளை சந்தோஷ் தயாரித்துள்ளார்.
அவற்றின் அடிப்படையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 97 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்.
தனது கேள்விகளுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக மாநில தகவல் ஆணையத்தில் சந்தோஷ் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி, மனுதாரரின் செயல்பாட்டைக் கடுமையாகக் கண்டித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலும், பொதுநலன் ஏதுமின்றி சந்தோஷ் செயல்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை, தனிப்பட்ட காதல் விவகாரத்தில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகத் தவறாகப் பயன்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் ஆணையர் தெரிவித்தார்.
இதுபோன்று முறையற்ற மனுக்களைத் தாக்கல் செய்து அரசுப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்ய ஓராண்டு காலத்துக்குத் தடை விதிக்கப்படும் என சந்தோஷுக்கு எச்சரிக்கை விடுத்தார்.