மாலைதீவு ஜனாதிபதி இலங்கையிலிருந்து நாடு திரும்பினார்
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (06) புதன்கிழமை காலையில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், கடந்த 3ஆம் திகதி மாலைதீவு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தை
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு கட்டமாக கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் குறிக்கும் வகையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு கொழும்பில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
அத்துடன், மாலைத்தீவு - இலங்கை வணிக மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இலங்கையில் வசிக்கும் மாலத்தீவு சமூகத்தினரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு மற்றும் அவரது குழுவினரின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற பயணத்திற்காகக் கொழும்பு நகரில் கடந்த மூன்று நாட்களாகப் பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சிறப்புப் போக்குவரத்துத் திட்டம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.