திருமண பந்தத்தில் இணைந்த நோபல் பரிசுபெற்ற மலாலா!
மலாலா யூசப்சையி (malala Yousafzai) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மலாலா அசெர் மலிக் திருமண நிகழ்வு( நிக்கா) பேர்மிங்காமில் இடம்பெற்றுள்ளது.
தனது வாழ்வில் மிகவும் பெறுமதியான நாள் இது என மலாலா தெரிவித்துள்ளார். 2012 இல் தலிபான்களால் சுடப்பட்ட பின்னர் பாக்கிஸ்தானின் மகளிர் உரிமை செயற்பாட்டாளர் மலாலா மேற்கு மிட்லாண்டில் வசித்து வருகின்றார்.

வாழ்க்கையில் சகாக்களாகயிருப்பதற்காக அசெரும் நானும் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டோம் என மலாலா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். குடும்பத்தவர்கள் கலந்துகொண்ட சிறிய நிக்கா நிகழ்வு குறித்த படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
எங்களின் முன்னால் உள்ள பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியாகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் மகளிர் கல்வி உரிமை குறித்து கருத்து தெரிவித்தமைக்காக 15 வயதில் மலாலா இலக்குவைக்கப்பட்டார்.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் அவர் பயணம் செய்துகொண்டிருந்த பாடசாலை பேருந்தில் ஏறிய தீவிரவாதியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மலாலாவும் அவரது நண்பிகள் இருவரும் காயமடைந்தனர். கடும் காயங்களிற்குள்ளான மலாலா அதிலிருந்து மீண்ட பின்னர் பேர்மிங்காமில் குடியேறினார்.
