எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சி ; 2026 இல் விலை மேலும் சரியும் அபாயம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் அதிகரிப்பதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் அதன் விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் ரஷ்யா, வெனிசுவேலா மற்றும் ஈரான் தொடர்பான புவிசார் அரசியல் சிக்கல்களால் சந்தையில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் தொடரும் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 56 டொலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ ரக எண்ணெய் சராசரியாக 52 டொலராகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விநியோகம் அதிகரிப்பதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் எண்ணெய் விலை அதன் குறைந்தபட்ச அளவான 54/50 டொலர்களை எட்டும் என்றும் அந்த நிறுவனம் தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.
2026 இல் ஒரு நாளைக்கு சுமார் 2.3 மில்லியன் பீப்பாய் உபரியாக விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சந்தையைச் சமநிலைப்படுத்த விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, எண்ணெய் விநியோகத்தை வலுப்படுத்தவும் விலையை மலிவாக வைத்திருக்கவும் அந்நாட்டு கொள்கை வகுப்பாளர்கள் முன்னுரிமை அளிப்பார்கள்.
இது விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கடந்த ஆண்டில் மசகு எண்ணெய் விலை சுமார் 20 வீதம் வீழ்ச்சியடைந்தது. இது 2020 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிக மோசமான சரிவாகும்.
2027 ஆம் ஆண்டு முதல் விநியோகம் குறைந்து தேவை அதிகரிப்பதால், எண்ணெய் விலை மெதுவாக மீளத் தொடங்கும் என்றும், 2027 இல் சராசரியாக 58/54 டொலர்களாக இருக்கும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், நீண்ட கால முதலீடுகள் குறைவாக இருப்பதால், 2030 - 2035 காலப்பகுதியில் பிரெண்ட் ரக எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சராசரியாக 75 டொலராக உயரும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.
தற்போது நிலவும் விநியோக உபரியைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் எதிர்கால விலை வீழ்ச்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.