இலங்கையின் முக்கிய நகரங்களில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் ; அமைச்சரவை அனுமதி
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற நகரங்களை, அவற்றின் பாரம்பரியம் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் மாதிரி நகரங்களாக மறுசீரமைப்பதற்கும், அவற்றை வர்த்தகநாமப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்துவதற்கும் 2026 வரவு செலவுத் திட்டத்தில் 1,300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம்
அதற்கமைய, அனுராதபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், பொருத்தமான ஆலோசனை சேவை நிறுவனமொன்றின் ஆய்வுக்கு அமைய இந்த வர்த்தகநாமப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக 2026ஆம் ஆண்டில் மாத்திரம் 325 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நகர அபிவிருத்தித் துறையில் முறையான மற்றும் தரவுகள் அடிப்படையிலான அணுகுமுறையை ஊக்குவிக்கும் நோக்கில், 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டமும் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், மட்டக்களப்பு, சிலாபம், தம்புத்தேகம, வவுனியா, எஹலியகொட, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய 10 நகரங்களில் கண்டறியப்பட்டுள்ள 217 முன்னுரிமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, நகர வர்த்தகநாமப்படுத்தும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எஞ்சியுள்ள 975 மில்லியன் ரூபாயும், ஹட்டன் மற்றும் மாத்தளை நகரங்களின் அபிவிருத்திக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 500 மில்லியன் ரூபாயும் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, மொத்தம் 1,475 மில்லியன் ரூபாய் நிதியைக் கொண்டு, இந்த 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை 2026ஆம் ஆண்டுக்குள் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.