தெற்கு அரசியலில் பரபரப்பு – பதவி விலக தயாராகும் மைத்திரி!
நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து பாரிய வீடொன்றை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தி எவராவது குற்றச்சாட்டை நிருபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எனது பெயரை பயன்படுத்தி இந்த சபையில் இரு விடயங்களை குறிப்பிட்டார்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அமைச்சர்களுடன் ‘விஸ்கி’ அருந்தியபடியே வேலை செய்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை நான் நிராகரிக்கின்றேன். மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு எதிரானவன் நான். இது மக்களுக்கு தெரியும்.
அடுத்ததாக நான் ஜனாதிபதி பதவியில் இருந்து, பதவிக்காலம் முடிவடைந்து விலகிய பின்னர் மூன்று வீடுகளை ஒன்றாக்கி அங்கு வசிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிலும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.
இன்று சுகாதார அமைச்சராக இருக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல அன்று அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வீட்டையே நான் வதிவிடமாக பயன்படுத்திவருகின்றேன். 1984 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிக்கு உரித்தான சட்டமூலமொன்றின் பிரகாரம், ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர், ஓய்வு பெற்ற பின்னர் அமைச்சர்களுக்குரிய அனைத்து வரப்பிரதாசங்களும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் எனக்கு முதல் ஜனாதிபதி பதவியை வகித்தவர்களுக்கும் இவ்வாறு உத்தியோகப்பூர்வ வதிவிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச ஓய்வுபெற்ற பின்னர், சுகாதார அமைச்சராக நான் பதவி வகித்தபோது தங்கிய வீட்டையே வழங்கினேன். டி.பி. விஜேதுங்க காலத்தில்தான் இரண்டு வீடுகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில்தான் நான் தற்போது இருக்கின்றேன்.
இந்த தகவலை வைத்துதான் நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர். இரண்டு பிளட்களை ஒன்றிணைத்தே டி.பி. விஜேதுங்கவுக்கு வீடு வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
எனவே போலியான தகவல்களை வெளியிடுவோர் தொடர்பில் கவலை வெளியிடுகின்றேன். நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து வாழ்வதாக இருந்தால், விசாரணை மூலம் அதனை உறுதிப்படுத்தினால் எம்.பி. பதவியை துறக்கவும் தயார்.”- என்றார்.