இந்திய வெளிவிவகார செயலாளரிடம் கூட்டமைப்பு தெரிவித்த முக்கிய விடயம்!
13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்ற ஒரு விடயத்திலாவது தமிழ் தரப்புக்கள் ஒரே குரலில் வலிறுத்த வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் தரப்புக்களின் கோரிக்கை அழுத்தமாக இல்லையென்பதே இந்தியாவின் நிலைப்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேரில் தெரிவித்துள்ளார்.
இன்று (4) மாலை அளவில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது மாலை 6.30 மணியளிவில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனில், ஆகக்குறைந்தது 13 பிளஸ் ஆவது அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு முழுவதும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதன்போது, வடக்கு, கிழக்கு பகுதிகள் சீன கொலனியாக மாறுவத நாம் விரும்பவில்லை. இந்தியா அதை அனுமதிக்கக்கூடாது“ எனவும் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமென இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு இந்தியா மட்டும் அழுத்தம் கொடுப்பது போதாது. தமிழ் தரப்புக்களின் குரலும் வலுவாக ஒலிக்க வேண்டும். 13வது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையை அமுல்ப்படுத்த வேண்டுமென தமிழ் தரப்புக்கள் வலுவாக, ஓரே குரலில் கூற வேண்டும்.
இப்போது தமிழ் தரப்புக்களில் இருந்து வரும் குரலின் அழுத்தம் போதாதென இந்தியா கருதுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.