விசாரணைக்கு வரும் மகிந்தவின் மனு!
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
இதன்போது, மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளும் இன்றி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை பரிசீலித்த பின்னரே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதிபதிகள் குழாம் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளது.