தற்போதைய அரசாங்கத்தின் லட்சணம்; எரிந்து விழுந்த மஹிந்த ராஜபக்ஷ
தற்போதைய அரசாங்கத்தின் லட்சணத்தை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டம் நேற்று (05) நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் சூழல் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கட்சியின் உள்ளக கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கட்சியில் தற்போதைக்கு எந்தவித மாற்றங்களும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகள் குறித்தே இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவரது தனிப்பட்ட கருத்து என்னவென்று கேட்கப்பட்டதற்கு, தான் அதை ஊடகங்களுக்குச் சொல்வதை விட, ஊடகவியலாளர்கள் நேரடியாக வீதிக்குச் சென்று மக்களிடமே அது குறித்துக் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.
இதன் மூலம் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து மக்கள் மத்தியிலேயே உண்மையான அதிருப்தியும் கருத்தும் நிலவுகிறது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.