திட்டமிட்ட குற்றவாளிகள் நாமல் உள்ளிட்ட அவருடன் இருப்பவர்களே ; மஹிந்த ஜயசிங்க
திட்டமிட்ட குற்றவாளிகள் என ஒருசிலரின் பெயர் தெரிவிக்கப்படுகின்றபோதும் உண்மையில் திட்டமிட்ட குற்றவாளிகள் நாமல் உள்ளிட்ட அவருடன் இருப்பவர்கள்தான் என்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற இலங்கை குடியரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடுகள், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றவாளிகள்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐஸ் போதைப்பொருள் தொடர்பாகவோ கொள்கலன்கள் தொடர்பாகவோ யாரும் கதைக்காத நிலையில் நாமல் ராஜபக்ஷ முந்திக்கொண்டு, அதுதொடர்பில் சபையில் உரையாற்றி இருந்தார்.
அதேபோன்று ஐஸ் பாேதைப்பொருள் கொள்கலன்களை எமது அரசாங்கமே விடுவித்ததாக தெரிவிக்க முயற்சிக்கின்றனர். அதேநேரம் திட்டமிட்ட குற்றவாளிகள் என மாகந்துரே மதூஷ், ஹரக்கட்டா போன்றவர்களையே தெரிவிக்கிறோம்.
ஆனால் உண்மையான திட்டமிட்ட குற்றவாளிகள் நீங்கள் தான் என்பது தற்போது நாட்டுக்கு வெளியாகி இருக்கிறது என்பதை நாமல் ராஜபக்ஷ்வுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஐஸ் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகள், அவர்களுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகளில் தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
அதனால், அதற்கு பயந்தே தற்போது அந்த குற்றங்களை மறைக்க பல்வேறு கதைகளை தெரிவித்து வருகின்றனர். போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பொதுஜன பெரமுன உறுப்பினர் தலைமறைவாகி இருக்கிறார்.
அவரது கட்சி உறுப்புரிமை இரத்துச்செய்திருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அது எப்போது செய்தது என திகதி ஒன்று இல்லை. ஆனால் 2011இல் நிமல் லான்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டபோது, மஹிந்த ராஜபகஷ் அங்கு சென்று, அவரை பாதுகாத்த போது, நிமல் லான்சாவின் கட்சி உறுப்புரிமையை நீக்க நாமல் ராஜபக்ஷ்வினர் அவசரப்படவில்லை.
அன்று போதைப்பொருள் வியாபாரிகள் அரசாங்கத்துக்குள்ளே இருந்தனர். அதனால் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது எமது அரசாங்கம் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதனாலே போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த இவர்கள் தற்போது குழப்படைந்துள்ளனர். இவர்கள் குழப்பமடைந்தாலும் சட்டத்தில் இருந்து தப்பிக்க யாருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றார்.