மஹர சிறை மோதல் ; கைதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றது.
இதன்போது, அதிகளவில் இரத்தம் வெளியேறியமையே மரணத்திற்கான காரணம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், குறித்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளைப் பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (01) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.
இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.
இதற்கமைய, உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது. எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சிறைச்சாலையினுளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.