இன்று பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய அமாவாசை!
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது.
அமாவாசை மதம் மாதம் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பித்ரு பட்சம் 16 சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் பாபத்திற்கு ஆளாக நேரிடும் என சாச்திரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த மாத திதியில், சிரார்த்தம் செய்வோம்.

அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. நம்மால் அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால், மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது செய்ய வேண்டும். மகாளய அமவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும்.
புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது.
இவ்வாறு செய்வதனால் நமது பித்துருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் என அனைவருக்குமாக தர்ப்பணம் செய்யலாம்.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.
அதோடு புரட்டாசி அமாவாசை நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து தானம் கொடுப்பதன் மூலம் சுபகாரியத் தடைகள் நீங்கும் எனவும் கூறப்படுகின்றது.