மஹா சிவராத்திரியை முன்னிட்டு விழாக் கோலம் பூண்ட யாழ். நாவற்குழி திருவாசக அரண்மனை
மஹா சிவராத்திரியை இன்று முன்னிட்டு யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாசக அரண்மனை விழாக் கோலம் பூண்டுள்ளது.
சைவசமயத்தின் அடையாளமான நந்திக் கொடிகள் திருவாசக அரண்மனையைச் சூழப் பறக்கவிடப்பட்டுள்ளன.
அத்துடன் திருவாசக அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள 108 சிவலிங்கங்களுக்கும், நந்தியெம் பெருமானுக்கும் இன்று அதிகாலை முதல் நாளை (12) அதிகாலை வரை அடியவர்கள் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாவற்குழி திருவாசக அரண்மனையில் மகாசிவராத்திரி விழா மிக எழுச்சியாக இடம்பெற்றன.
எனினும் இந்த ஆண்டு கொரோனாச் சூழ்நிலையில் அடியவர்கள் திருக்கேதீஸ்வரம் செல்ல முடியாத காரணத்தால் பெருமளவு பக்தர்கள் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேக செய்து வழிபட வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள்.
எனவே, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அமைதியாக அடியவர்கள் தங்கள் கரங்களால் 108 சிவலிங்கப் பெருமானுக்கும் அபிஷேகம் செய்து வழிபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.
அத்துடன் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் விழித்திருந்து திருவாசகத்தை இடைவிடாது பாடி லிங்கோற்பவ காலத்தில் விசேட பூசை வழிபாட்டில் மக்கள் பங்குபற்றி மறுநாள் காலையில் நிறைவுப் பூசையுடன் அடியவர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்து செல்வது வழக்கம்.
மேலும் மகாசிவராத்திரி நாளில் சிவனின் நாமத்தை உச்சரித்து சிவனை வழிபாடு செய்வதால் எங்கள் துன்பங்கள் அகலும். நன்மைகள் பெருகும்.