பங்குனி திங்கள் ஆரம்பம்; யாழ் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மனில் குவிந்த பக்தர்கள்!
பங்குனி திங்கள் உற்சவம்; யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மனில் குவிந்த பக்தர்கள் ஈழத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களுள் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயமும் ஒன்றாகும்.
மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனி திங்கள் உற்சவம் மிக கோலாகலமாக இடம்பெறும், பங்குனி திங்கள் நாளில் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடுவார்கள்.அந்தவகையின் இன்றைய தினம் முதலாவது பங்குனி திங்கள் தொடங்கியுள்ளது.

ஆலயத்தின் பெருமை மிகு வரலாறு
யாழ்ப்பாணம், தென்மராட்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான்.
அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது.

அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான். நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான்.

பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான்.
அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன.
தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது "கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள். பன்றித்தலையுடன் காட்சி தந்ததாகக் கூறப்படும் இந்த அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறார்.
முக்கியமாக பங்குனித் திங்கள் உற்சவம், பொங்கல் மற்றும் கஞ்சி சமைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாது பங்குனி மாதம் திருமண வரம் தரும் மாதமாகும்.
சிவன்-பார்வதி, முருகன் - தெய்வானை, ராமர்-சீதை என தெய்வீக திருமணங்கள் பலவும் நடைபெற்ற மாதமாக கருதப்படுவதால், நீண்ட காலமாக திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால், நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பது நம்பிக்கை.