ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா ; வெற்றிடமான எம்.பி பதவி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை தொடர்பில் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
அப்துல் வாஹித்தின் இராஜினாமா 2026 செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.