எம்.பிக்களுக்காக இறக்குமதி செய்யப்படவுள்ள சொகுசு வாகனங்கள் ; வெளியான தகவல்
எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, கெப் ரக வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.
எனினும், இதுவரையில் அரசாங்கம் இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியற்ற வாகன இறக்குமதி
தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதை ஏற்கனவே நிறுத்தியுள்ளது. கடந்த காலங்களில், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதியைப் பயன்படுத்தி, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், சொகுசு ரக வாகனங்களை இறக்குமதி செய்தனர்.
பலர் இறக்குமதி செய்த வாகனங்களை வேறு தரப்புக்கு மாற்றினர் என்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வாகனத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
எனினும், தற்போது வரை வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக கெப் ரக வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து, அரசாங்கம் ஆலோசித்து வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.