அதிவேக நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக கைவிடப்பட்ட சொகுசு கார்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றை திஹகொட பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, அபரக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) இரவு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை
அக்காரிலிருந்த பற்றுச்சீட்டின் மூலம், அது தொடாங்கொட நுழைவாயிலூடாக உட்சென்று மத்தல பகுதியை நோக்கி பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் பதிவு இலக்கத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அதே பதிவு இலக்கத்தில் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கார் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்காரினதுதும் இக்காரினதும் பதிவு இலக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும், இயந்திர இலக்கம் வெவ்வேறானவை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இக்கார் மெரூன் நிறத்திலானது எனவும், இரத்தினபுரியிலுள்ள கார் வெள்ளை நிறத்திலானது எனவும் தகவல் கிடைத்துள்ளது.
கைவிடப்பட்டிருந்த காரை திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர், அதன் கதவுகளைத் திறந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள ஆசனத்தில் நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றும், குருநாகல் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நாட்குறிப்புப் புத்தகத்தினுள் இருந்த அடையாள அட்டையின் நிழற்பிரதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதுடன், அம்முகவரி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று (25) முற்பகல் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை அங்கு தெரியவந்துள்ளது. அதற்கமைய, குறித்த கார் மற்றும் இரத்தினபுரியிலுள்ள கார் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக, அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி உண்மையான கார் எது என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.