23 வயது பெண்ணின் உயிரைப் பறித்த காதல்; காதலன் தப்பியோட்டம்
சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர், காதலனால் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இருவருக்கும் இடையே வாக்குவாதம்
தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தாக்குதல் நடத்திய நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொல்லினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.