கந்தசஷ்டி விரதவேளையில் பெறுமதிமிக்க முருகன் சிலை திருட்டு!
பசறைப் பகுதியின் கஹாவத்தை பெருந்தோட்டப் பிரிவில் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரத வேளையில் பெறுமதிமிக்க முருகன் சிலை திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து, பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை (08) சனிக்கிழமை 6.30 மணியளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண், சுவாமி எழுந்தருளியிருக்கும் அறைக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, ஆலயப் புசகர் உள்ளிட்ட ஆலய நிருவாகத்தினரிடம் முறையிட்டார்.
அதையடுத்து, எல்லோரும் ஆலயத்திற்குள் சென்று பார்த்த போது, முருகன் சிலையை காணவில்லை. இந்த சிலை திருடப்பட்டதையறிந்து, பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பசறைப் பொலிஸார் இந்த திருட்டு குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.