வயிற்றை மட்டும் பார்க்காது நாட்டையும் பாருங்கள்!
வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றதாக தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே , மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையையும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு அரசு தடுப்பூசிகளை வழங்கியது. அதனால்தான் இன்று எவ்வித அச்சுறுத்தலும் இன்றி போராட்டங்களை நடத்தமுடிகின்றதாகவும் தெரிவித்த அமைச்சர், இதற்கு காரணம் அரசாங்கம்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
அதேசமயம் நாட்டில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என தெவித்த அவர் , ஏப்ரல் முதலாம் திகதிக்குள் சமையல் எரிவாயு பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்.
அதன்பின்னர் எரிபொருள் பிரச்சினையும் தீரும் எனவும் தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் தற்போதைய நிலைமை என்பது தற்காலிகமானது என்றும், எனவே, வயிறு மற்றும் வருமானம் குறித்து மட்டும் மக்கள் சிந்திக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.