லண்டன் – கொழும்பு நேரடி விமானச் சேவை; பிரிட்டிஷ் ஏர்வேஸ் விசேட உணவுப் பட்டியல்
லண்டன் காட்விக் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கான புதிய நேரடி விமானச் சேவையை ஆரம்பிப்பதை முன்னிட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனில் புகழ்பெற்ற இலங்கை மற்றும் தென்னிந்திய உணவகமான ஹொப்பர்ஸ் உடன் இணைந்து விசேட உணவுப் பட்டியலை அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி முதல், பிரிட்டிஷ் ஏர்வேஸின் கிளப் வேர்ல்ட் வணிக வகுப்பில் பயணிக்கும் பயணிகள், இலங்கையின் தனித்துவமான நறுமணப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சுவைகளைக் கொண்ட இந்த உணவுகளை விமானப் பயணத்தின்போது சுவைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட உணவுப் பட்டியல்
இந்த விசேட உணவுப் பட்டியலில் பின்வரும் உணவுகள் இடம்பெறுகின்றன: தயிர் வடை: இந்தியாவின் புகழ்பெற்ற தெருவோரச் சிற்றுண்டிகளை நினைவூட்டும் வகையில்,
தயிர், புளி மற்றும் கொத்தமல்லிச் சட்னியுடன் பரிமாறப்படும் உணவு. களுபோல் சிக்கன்: ஹொப்பர்ஸ் உணவகத்தின் தனித்துவமான கோழி இறைச்சி உணவு. இது எலுமிச்சைச் சோறு மற்றும் பீட்ரூட் கறியுடன் பரிமாறப்படும்.
பொளிச்சது காட் மீன்: தக்காளி, மிளகாய் விழுதில் ஊறவைத்து வாழை இலையில் மடித்துச் சமைக்கப்படும் மீன் உணவு. இது தேங்காய்ப்பால் சோறு மற்றும் காரமான அன்னாசிப் பழக் கறியுடன் பரிமாறப்படும்.
வட்டலாப்பம் பிரெட் புட்டிங்: பிரித்தானியாவின் பாரம்பரிய பிரெட் புட்டிங்கிற்கு இலங்கைப் பாணியில் புதிய வடிவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட இனிப்பு வகை.
மேலும், இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ‘சிலோன் பேர்ல்’ (Ceylon Pearl) எனப்படும் விசேட மதுபானமும் விமானத்தின் பார்களிலும் பயணத்தின்போதும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.