அரசாங்கத்தை அசௌகரியப்படுத்த விரும்பவில்லை! லொஹான் ரத்வத்தே
லொஹான் ரத்வத்தே ராஜாங்க அமைச்சர் பதவியை முழுமையாக துறக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 12ம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்ததாக லொஹான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லொஹான் ரத்வத்தே இன்றைய தினம் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
இது தொடர்பிலான கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அவர் அனுப்பி வைத்திருந்தார்.
லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைகள் விவகார மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் ராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வந்தார்.
அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்தைத் தொடர்ந்து லொஹான் ரத்வத்தே ஒரு ராஜாங்க அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது ராஜினாமா கடிதத்தில் தெளிவாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்தில் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்த விரும்பவில்லை என அவர் மேலும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, லொஹான் ரத்வத்தே தொடர்ந்தும் இரத்தினக் கல் மற்றும் ஆபரண கைத்தொழில் ராஜாங்க அமைச்சராக கடமையாற்றுவார் எனத் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்று வருவதுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் லொஹான் ரத்வத்தே ஒரு ராஜாங்க அமைச்சர் பதவியை துறந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.