லொகான் விவகாரம்; தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
துப்பாக்கி முனையில் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுதாக்கல் செய்துள்ள தமிழ் அரசியல் கைதிகளிற்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிடவேண்டும் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாகக் கூறி அநுராதபுரம் சிறையில் உள்ள எட்டு அரசியல் கைதிகள் சார்பாக உயர் நீதிமன்றில் சட்டத்தரணி சுமந்திரனால் மனுதாக்கல் செய்யப்பட்டது.
செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தம்மை தங்களை வட மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.