தமிழர் பகுதியில் இரவு மேய்ச்சலுக்காக சென்ற ஜீவன்களுக்கு துப்பாக்கிச் சூடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு பகுதியில், மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) இரவு மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள், இன்று (15) காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு
மைலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில், அப்பகுதியில் பாரம்பரியமாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமது வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், பண்ணையாளர்களிடமும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்திருந்தனர்.
இந்நிலையில், தமது கால்நடைகள் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேய்ச்சல் தரைப் பகுதியில் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவ்வாறானவர்களே தமது கால்நடைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் நேரில் வந்து நிலைமைகளைக் கேட்டறிந்தாலும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கும் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு எவ்வாறு தொடர்ந்து வாழ்வது எனத் தெரியாமல் தவிப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.