உலக காற்பந்து நட்சத்திரம் மெஸ்ஸிக்கு அவலம் ; கயிற்றால் கட்டி வைத்த அதிகாரிகள்
உலக காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் அமைக்கப்பட்ட மெஸ்ஸியின் பிரம்மாண்டமான சிலை, காற்றில் ஆடுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லியோனல் மெஸ்ஸியின் இந்திய வருகையை முன்னிட்டு, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் 21 மீட்டர் உயரமுடைய தங்க நிறத்திலான பிரம்மாண்டமான சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

சிலை தற்போது பாதுகாப்பற்ற நிலை....
அர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி, உலகக் கிண்ணத்தை ஏந்தியிருப்பது போன்று இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தச் சிலை தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மேற்கு வங்காள மாநில பொறியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
லியோனல் மெஸ்ஸி சிலை பலத்த காற்றில் ஆடுவதனால், எந்த நேரத்திலும் அது சரிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது . வீதி ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ள இந்தச் சிலையினால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதற்கட்டமாக தொழிலாளர்கள் சிலைக்கு மேல் ஏறி, கயிறுகள் மூலம் அதன் தோள் பகுதியைக்கட்டி சிலையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலையை அகற்றும் பணி நினைத்ததை விட சவாலாக இருப்பதாகவும், கூடிய விரைவில் இந்தச் சிலை முற்றிலும் அகற்றப்படும் என்றும், இது வேறு இடத்தில் மீண்டும் நிறுவப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.