லயோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம்; தலை சுற்றவைக்கும் செலவுகள்!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட 'GOAT' (Greatest Of All Time) சுற்றுப்பயணம், அதன் பிரம்மாண்டமான செலவுகள் மற்றும் கட்டணங்கள் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, இந்த விளம்பரப் பயணத்திற்காக அவருக்கு 100 முதல் 150 கோடி இந்திய ரூபாய் (சுமார் 12 முதல் 18 மில்லியன் டொலர்) வரை வழங்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

100 முதல் 150 கோடி இந்திய ரூபாய்
இந்தியாவில் மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்கவும், அவருடன் சிறிது நேரம் உரையாடவும் ஒரு ரசிகரிடமிருந்து சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய் (சுமார் 12,000 டொலர்) வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெருநிறுவன விருந்தினர்களுக்கான பிரத்யேக மூடிய அறை சந்திப்புகளுக்கு இதைவிட அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது டெல்லி ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தார்.

2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வின் போது போதிய முகாமைத்துவம் இன்மை காரணமாக ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்ட போதிலும், ஏனைய நகரங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் டெல்லியில் லயோனல் மெஸ்ஸி சந்தித்தார்.

இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் எவ்வளவு தொகை மெஸ்ஸிக்கு நேரடியாகச் சென்றது அல்லது பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்த விரிவான நிதி அறிக்கையை அமைப்பாளர்கள் இதுவரை வெளியிடவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.