அஷ்டலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்க இந்த தீபத்தை ஏற்றுங்கள்
எவரொருவருக்கு அஷ்டலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறதோ அவர்களின் வாழ்க்கையில் எந்தவித தடைகளும், தடங்கல்களும், துன்பங்களும், துயரங்களும் இருக்காது. அந்த தாயாரின் அருளை நாம் பெறுவதற்கு நமக்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன.
பல வழிபாட்டு முறைகளையும் நாம் மேற்கொள்கின்றோம். அவ்வாறு நாம் மேற்கொள்ளக்கூடிய வழிபாட்டு முறைகளில் ஒன்று தான் சங்கு தீபம்.
மகாலஷ்மி தாயாரின் அருளை பெறுவதற்கு நாம் மகாலட்சுமி தாயாருக்கு சில தீபங்களை ஏற்றி வழிபடுவோம்.
சங்கு தீபம்
அதிலும் குறிப்பாக நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம், நெல்லிக்காய் தீபம் என்ற வரிசையில் சங்கு தீபமும் ஒன்று.
மகாலட்சுமி தாயார் பிறந்த இடமாக கருதப்படும் கடலில் இருந்து பிறந்த சங்கில் நாம் தீபம் ஏற்றும் பொழுது அந்த தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சங்கு தீபம் ஏற்றுவதற்கு முதலில் வலம்புரி சங்கு ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது கல் உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்.
தீபம் ஏற்றுதல்
கல் உப்பு நன்றாக கரைந்த பிறகு அந்த தண்ணீரில் இந்த வலம்புரி சங்கை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இந்த சங்கை பூஜை அறையில் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
நல்லெண்ணெயும், பசு நெய்யும் சரிசமமாக கலந்து பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதற்கு முன்பாக அதில் இரண்டு சொட்டு தேனையும் கலக்க வேண்டும்.
இவ்வாறு விளக்கேற்றுவதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சங்கு தீபமானது தெற்கு அல்லது தெற்கு சம்பந்தப்பட்ட தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளை நோக்கி ஏற்றக் கூடாது என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு முடிந்த அளவு கிழக்கு முகமாக ஏற்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.