தமிழ் – சிங்கள புத்தாண்டை இந்த இடத்திலேயே கொண்டாடுவோம்!
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகள் தாம் தமிழ் – சிங்கள புத்தாண்டையும் இந்த இடத்திலேயே கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இதேவேளை, அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் போராட்டத்தையும் கைவிடாது, அதே வேளை புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று திங்கட்கிழமை (11-04-2022) மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும், வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களாகப் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மலர் வலயம் வைத்து , மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பினை வெளியிட்டமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.