நீர்த்தேக்கத்தில் சிக்கி உயிருக்காக போராடிய சிறுத்தை ; சுமார் 3 மணிநேரத்தின் பின்னர் மீட்ட அதிகாரிகள்!
நுவரெலியாவில் கற்பாறை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிருக்காகப் போராடிய சிறுத்தை ஒன்றை சுமார் 3 மணி நேர போராட்டத்தின் பின்னர் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் இன்று சிறுத்தை ஒன்று விழுந்துள்ளது.
நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய சிறுத்தையை அவதானித்த பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸார் மூலம் நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கினர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் கற்பாறை நீர்த்தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வலையை போட்டு சிறுத்தையை உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் சிறுத்தையை ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து பரிசோதித்தார்.
பரிசோதனையில் சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகளுக்குப் பணித்தார்.
குறித்த சிறுத்தை சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்து உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.