இஸ்ரேல் தாக்குதல்களுக்கு மத்தியில் லெபனான் அமைதி முயற்சி
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களுக்கு மத்தியில், லெபனான் அரசாங்கம் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமானத் தாக்குதலுக்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட்ட லெபனான் உள்துறை அமைச்சர் அஹ்மத் ஹஜ்ஜார், நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

"எமது முதன்மையான கோரிக்கை மற்றும் இலக்கு போர் நிறுத்தம் மட்டுமே. எமது நாட்டுக்கு பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உலகத்தின் எல்லை வரைச் செல்ல வேண்டியிருந்தாலும் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம்" என அவர் வலியுறுத்தினார்.
லெபனான் மிகவும் தீவிரமான இராஜதந்திரப் பாதையில் பயணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லெபனான் அதிகாரிகளின் தகவல்படி, இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு லெபனான் ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.
அதாவது, முன்னதாகவே ஒரு முறையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான ஒரு சூழலில் மட்டுமே லெபனான் அதிகாரிகள் இஸ்ரேலுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறியப்படுகிறது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு போர் நிறுத்தத்தை அறிவிப்பதையும், நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான திகதியைத் தீர்மானிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலானது, அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் உக்கிரமான தாக்குதல்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் பாதிப்புகள் லெபனான் அரசாங்கத்தை உடனடியாக ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி நகரத் தூண்டியுள்ளது.