இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தோல்வி தனக்கு நிச்சயம் என்று கருதும் வேட்பாளர் ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகவுள்ளார் என்றும், இந்த வாபஸ் அறிவிப்பு மூலம் அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற உறுதிமொழியை அவர் பெற்றுக்கொள்ளத் திட்டம் போட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (21.01.2024) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரைத் தேர்வு செய்யவுள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் தோல்வி தனக்கு நிச்சயம் என்று கருதும் வேட்பாளர் ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.
தனக்கு ஏற்படும் தோல்வியைத் தவிர்ப்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுக்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அதன்மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களின் பின்னர் அடுத்த தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற உறுதிமொழியை மேற்படி வாபஸ் அறிவிப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அவர் திட்டம் போட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா தான் நினைத்தவாறு, கட்சியின் பொதுச் சபையில் அங்கம் வகிக்காத இளைஞர், யுவதிகள் பலரை நாளை (21.01.2024) நடைபெறவுள்ள புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.
மாவை சேனாதிராஜாவின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறிய செயல் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.