இலங்கையின் முக்கிய பாதாள உலக கும்பலின் தலைவர் வெளிநாட்டில் கைது
பாதாள உலக கும்பலின் தலைவரான “வெல்லே சாரங்க” என அழைக்கப்படும் கமகே சாரங்க பிரதீப் ஹேவத் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த “வெல்லே சாரங்க” என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பு முகத்துவாரம் லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் “வெல்லே சாரங்க” என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் “வெல்லே சாரங்க” என்பவரின் மைத்துனரான இறைச்சி வியாபாரி மஹபாகே பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.