தமிழர் பகுதியில் சட்டத்தரணி செய்த மோசமான செயல் ; அதிரடி காட்டிய நீதிமன்றம்
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து காணி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்காக, வென்னப்புவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சட்டத்தரணி ஒருவருக்கும் மற்றுமொருவருக்கும் தலா 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி தமரா விக்ரமசேகரவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கு தாக்கல்
2009 ஆம் ஆண்டு வைக்காலை பகுதியில் உள்ள காணி ஒன்றின் போலி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்து, பெண் ஒருவரை ஏமாற்றி 30 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
சமன் குமார என்பவருக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், இரண்டாவதுக்கு 3 ஆண்டுகள் மற்றும் நான்காவது குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் என மொத்தம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 180,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
சட்டத்தரணிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், மூன்றாவதுக்கு 3 ஆண்டுகள் மற்றும் ஐந்தாவது குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் என மொத்தம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1,80,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தலா 8 இலட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதனைத் தவறவிட்டால் மேலதிகமாக 12 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டனைக் காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.