தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் பண மோசடி; பயணிகள் குற்றச்சாட்டு!
வெளிநாடுகளிலிருந்து வருகைதரும்போது, பரிசோதனைக்காக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் விடுதிகளில் தம்மிடம் அதிகளவிலான பணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ரெபிட் பிசிஆர் பரிசோதனைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டு பயணிகள் இவ்வாறு விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நாட்டின் தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என நாளாந்தம் சுமார் 2,000 பேர் கட்டுநாயக்க விமானத்தின் ஊடாக நாட்டுக்கு வருகைதருகின்றனர்.
இவ்வாறு நாட்டுக்கு வருகை தருபவர்க அருகிலுள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், 12 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை கிடைக்கப்பெறுவதாகவும், இத்தகைய குறுகிய காலத்துக்கு விடுதியில் தங்கியிருப்பதற்காக தம்மிடம் அதிகளவிலான பணம் வசூலிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
“அதிகாலை 4 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தடைந்தோம். 5.30 மணிவரை எமது பயணப்பொதிகள் கிடைக்கும்வரை காத்திருந்தோம்.
பின்னர் 6 மணியளவில் பேருந்தில் ஏறினோம். எமது பயணப்பொதிகளை வேறொரு பாரவூர்தியில் ஏற்றினர். பின்னர் எம்மை பேருவளைக்கு அழைத்துசென்றனர்.
காலை 9.30 மணியளவிலேயே பேருந்தில் இருந்து இறங்கினோம். விடுதியில் தனி அறைக்காக 12,500 ரூபாவும், இரண்டு பேருக்கான அறைக்கு 14,000 முதல் 15,000 ரூபா வரை அறிவிடுவதாகக்கூறினர்.
எனினும், ஒரு அறையில் நுழைந்தபோது, அவை 3,000 – 4,000 ரூபாவுக்கு கூட பெறுமதியில்லாத அறைகள் என அனுமானிக்க முடிந்ததுடன் அங்கு எந்த வசதியும் இருக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இது தொடர்பாக மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்வியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், விமான நிலையத்திற்குள் இரண்டு ஆய்வகங்கள் உள்ள நிலையில் அவை ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேரத்திற்குள் PCR அறிக்கைகளை வழங்கும் திறன் கொண்டவை.
இவ்வாறு இருக்கையில், இலங்கைக்கு வரும் பயணிகளை சுரண்டுவதற்கான இவ்வாறான வகையில் சில மோசடியாளர்கள் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.