லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
லாஃப் எரிவாயு நிறுவனம் கொள்வனவு செய்துள்ள திரவப் பெற்றோலிய வாயு அடங்கிய மூன்று கப்பல்கள் இம்மாதத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளன என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மூன்று கப்பல்களும் அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை வந்தடையவுள்ளன என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகம்
இதன்படி, முதலாவது எரிவாயுக் கப்பல் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதிக்கு இடையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், இரண்டாவது கப்பல் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தையும் வந்தடையவுள்ளன.
மூன்றாவது கப்பல் இம்மாதம் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதிக்கு இடையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிவாயுத் தொகுதிகள் கிடைத்த பின்னர், அவற்றைச் சுங்க அனுமதியுடன் விடுவித்து, படிப்படியாக விநியோகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் எரிவாயுச் சந்தைக்கு சேவையாற்றி வரும் உள்நாட்டு நிறுவனமாக, எரிவாயு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கும், நீண்டகால விநியோகத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் லாஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமை மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக சர்வதேச எரிவாயு விநியோக வலையமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.