லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!
லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickrematunge) படுகொலை விவகாரம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன, (Ayesha Jinasena) லசந்த கொலை வழக்கில் மனுதாரரான ஜயந்த விக்ரமரத்னவை ( Jayantha Wickramaratne) கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் இல்லை.' என உயர் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் சார்பில் அறிவித்தார்.
தன்னைக் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரம், அரத்ன தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளின் போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன இதனை அறிவித்தார்.
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க (Kumudini Wickremasinghe) மற்றும் அர்ஜுன ஒபேசேகர (Arjuna Obeyesekere) ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன மேற்படி விடயத்தை அறிவித்தார்.
அதேவேளை, மனுதாரரான ஜயந்த விக்ரமரத்ன சார்பில் மன்றில், சிரேஷ்ட சட்டத்தரணி உபேந்ர குணசேகர வின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி நவின் மாரப்பனவுடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, கைது செய்ய மாட்டோம் என சட்ட மா அதிபர் உறுதியளிக்கும் நிலையில், கைது செய்வதை தடுக்கக் கோரும் தமது மனுவை வாபஸ் பெற அனுமதியளிக்குமாறு கோரினார். அதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தமை, பொய்யான சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பிலும் இடம்பெறும் விசாரணைகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்ய உயர் நீதிமன்றம் கடந்த 2018 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பிதிருந்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, பிரியந்த ஜயவர்தன, எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் அப்போது இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த மனுவை விசாரணை செய்து முடிக்கும் வரை முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் லசந்த விக்ரமதுங்க விவகாரம் தொடர்பில் முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் நெறிப்படுத்தலில் பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதன்போது 2018 ஜூன் மாதம் கல்கிசை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்த சி.ஐ.டி., ஜயந்த விக்ரமரத்ன எவ்வாறு லசந்தவின் கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்தார் என்ற விடயத்தை அறிவித்திருந்தது.
அத்துடன் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையையும் பெற்றிருந்தது. இவ்வாறான நிலையிலேயே தற்போது, அவரைக் கைது செய்ய போதுமான விடயங்கள் இல்லை என சட்ட மா அதிபரே உயர் நீதிமன்றுக்கு நேற்று (21) அறிவித்துள்ளார்.