லசந்த படுகொலை; உருவாக்கப்பட்டது மக்கள் தீர்ப்பாயம்!
ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.
உலகின் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் லசந்த கொலை விவகாரத்தை ஹேக்கிற்கு கொண்டு சென்றுள்ளன. லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு நீதி வழங்குவதற்கான, முன்னொருபோதும் இடம்பெறாத முயற்சியாக உலகின் மூன்று முக்கிய ஊடக சுதந்திர அமைப்புகள் மக்கள் தீர்ப்பாயமொன்றை உருவாக்கியுள்ளன.
சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலை நாட்டுவதற்காக, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு , இந்த படுகொலை வழக்குகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்புடைய அரசாங்கங்களைப் பொறுப்புக் கூறச் செய்வதற்காகவும் ‘மக்கள் தீர்ப்பாயமொன்றை’ நிறுவியுள்ளன.
அதன்படி வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம் (Free Press Unlimited) , எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders ) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (Committee to Protect Journalists) ஆகிய மூன்று சர்வதேச அமைப்புக்கள் இணைந்து ‘ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்’ என்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவைதொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவர்களுடைய கதைகளைக் கேட்டறிந்து பதிவு செய்தல் ஆகியவற்றின் ஊடாக குற்றமிழைத்த அரசாங்கங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையிலேயே இந்த மக்கள் தீர்ப்பாயத்தின் செயற்பாடுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.