இலங்கைக்கு கடத்தவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் சிக்கியது
இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 8 கோடி இந்திய ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்த மாவடியைச் சேர்ந்த 32 வயதான நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக இந்திய மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இலங்கைக்கு படகு மூலமாக போதைப்பொருள் கடத்தல்
இதையடுத்து, அவரை கடந்த ஒரு வாரமாக பொலிஸார் கண்காணித்து வந்தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு படகு மூலமாக போதைப்பொருட்களைக் கடத்தி செல்லவிருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மேலவிலக்குடியில் இருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன் கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார், அவரிடமிருந்த 950 கிராம் எடையுள்ள, இந்திய ரூபாயில் 8 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளையும், இந்திய ரூ.2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேவேளை கைதாகியுள்ள அலெக்ஸ் மீது பல்வேறு மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.