சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை
சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்.
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையிட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரமாக முயற்சிப்போம்
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளராக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்,
சவுதிக்கு பணிக்குச்சென்ற தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மதநிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மரணதண்டனை விதித்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, '2013 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் குழந்தையொன்றைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் ரிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம்.
அக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடு மிகப்பலவீனமானதாகவே இருந்தது.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் காணப்படுகின்ற தற்காலத்துக்குப் பொருந்தாத, மனிதநேயமற்ற தண்டனைகளிலிருந்து எமது தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் சவுதி அரேபிய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படாத நிலையிலும், நாம் எமது தொழிலாளர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவந்தோம்' என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
மேலும், நாம் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமாக முயற்சிப்போம் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.